பஹ்ரைன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான
பதிவு பெற்று, பஹ்ரைன் வாழ் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு மையமாகத் திகழும் பஹ்ரைன்
தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழாவை ஜனவரி 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)
கோலாகலமான முறையில் கொண்டாட முடிவெடுத்துள்ளது
.
பஹ்ரைன் இந்திய சங்கத்தின்
(Indian Club) நூறாவது ஆண்டையொட்டி இவ்விழா நடைபெறுவதால் மிகப் பிரமாண்டமான முறையில்
ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன..
பஹ்ரைன் தமிழ் சங்க செயல்
வீரர்கள் இதற்கான மும்முரமான பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். பஹ்ரைனில் செயல்படும்
நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து இதற்கான செலவுகளுக்கு பொருளதவி செய்ய முன்வந்துள்ளன.
உலகம் முழுவதும் வாழுகின்ற
தமிழர்களால் பொங்கல் பண்டிகை வளைகுடா, கீழைநாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு
ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது..
கடந்த பதினைந்து ஆண்டுகட்கும்
மேலாக பொங்கல் விழா இதே இந்திய சங்கத்தின்
திறந்தவெளி அரங்கத்தில் பஹ்ரைன் தமிழ் சங்கம் தவறாமல் கொண்டாடி வருகிறது.
காலை முதல் இரவு வரை கண்கொள்ளாக்
காட்சியாக நடைபெறும் இப்பொங்கல் விழாவில் பஹ்ரைன் வாழ் சகோதரர்கள் மட்டுமின்றி அண்டை
நாடுகளான சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளிலிருந்தும் தமிழ் உள்ளங்கள் திரண்டு வந்து
நிகழ்ச்சியைச் சிறப்பிப்பார்கள் என கருதப்படுகிறது,. சுமார் 5,000 க்கும் மேற்பட்ட
தமிழர்கள் இந்நிகழ்ச்சிக்கு பெருந்திரளாக வந்து கலந்துக் கொள்வார்கள் கொள்வார்கள்.
ஒரு நாள்முழுக்க தொடர்ச்சியாக நடைபெறும் இவ்விழா மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
காலை நிகழ்ச்சி
காலை பத்து மணிக்கு மாக்கோலம்,
பூக்கோலமிட்டு, குத்து விளக்கேற்றி, பொங்கல் பானை புத்தரிசி பொங்கி, வழிபாட்டுடன் தொடங்கும்
இவ்விழாவில் பஹ்ரைன் நாட்டு இந்தியத் தூதுவர் உட்பட முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்துக்
கொள்ள இசைந்துள்ளார்கள். இசை மற்றும் கலாச்சார நடனங்கள் காலையில் ஏற்பாடு செய்யப்படுள்ளன,
உழவர் திருநாளாகப் போற்றப்படும்
கிராமிய மணம் வீசும் இவ்விழா நடைபெறும் அரங்கம் வாழைமரம், மஞ்சள் கொத்து, மாவிலைத் தோரணங்களால்
அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு காணப்படும். தாய்மண்ணில் காணப்படும் அதே உற்சாகம்
இங்கும் பிரதிபலிக்கும்.
ஆண்களுக்கென உரி அடித்தல்,
கயிறு இழுக்கும் போட்டி போன்ற வீர விளையாட்டுக்கள் நடைபெறும், மகளிர் மற்றும் சிறுவர்களுக்கென
நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் எண்ணற்ற பரிசுப் பொருட்கள், திடீர்ப் பரிசுகள்
வழங்கப்படும்.
பகற்பொழுதில் தலைவாழை இலையோடு
அறுசுவை உணவு பரிமாறப்படும்.
மாலைப்பொழுதில் தமிழகத்திலிருந்து
வருகை தரும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கலைவிழா நடைபெறும்.
ஆடற் பாடல் நிகழ்ச்சிகள் வாத்தியக்கலைஞர்கள் துணையோடு விழா மேடையில் நடைபெறும்.
காலாத்தால் அழியாத பழைய பாடல்களும்,
மனதைத்தொடும் மெல்லிசை ராகங்களும், துள்ளல் இசையோடு கூடிய புதிய பாடல்களும், கிராமிய
மணம் வீசும் நாட்டுப்பாடல்களும் ரசிகர்களின் காதுகளுக்கு விருந்தாக அமையும். ரசிகர்களின் ஏகோபித்த பாரட்டுதல்களைப்பெற்ற பஹ்ரைன் வாழ் மெல்லிசை பாடகர்களும் இசை விருந்தளிப்பார்கள்.
பஹ்ரைன் இந்திய சங்கத்தின்
திறந்த வெளி அரங்கிலும், உள்ளரங்கத்திலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.. இசைநிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு
தொடங்கும். 6.00 மணிக்கு வாசற் கதவுகள் திறக்கப்படும். நிகழ்ச்சி இரவு 10.30 மணி வரை
நீடிக்கும்நுழைவுக் கட்டணம் கிடையாது. நிகழ்ச்சி முற்றிலும் இலவசம்.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட
சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்:
செயலாலர் சலீம் 39873499
கேளிக்கைச் செயலாளர் சாமி
39447151
துணைச் செயலளார் தாயகம் சுரேஷ்
36040711
இலக்கியச் செயலாளர் பஷீர்
36040711
கலைவிழாவில் பங்குபெறும் நட்சத்திரக்
கலைஞர்களைப் பற்றிய விவரங்கள் இதோ:
ஸ்ரிதிகா
நடிகை, நிகழ்ச்சி, தொகுப்பாளினி,
பாடகி, போன்ற பன்முகம் கொண்டவர். இவர் ஒரு தமிழ் தொலைக்காட்சி நடிகை மற்றும் திரைப்பட
நடிகை ஆவார். இவர் “மதுரை டூ தேனீ” என்ற திரைப்படத்தில்
கதாநாயகியாக நடித்தார். திருமுருகன் இயக்கி நடிக்கும் “நாதஸ்வரம்” என்ற தொடரின் மூலம்
சின்னத்திரையில் அறிமுகமானவர். அந்த தொடரில் இவர்
“மலர்” என்ற மருமகள் பாத்திரம் ஏற்று நடித்ததன் மூலம் எல்லோருக்கு பரிச்சயமான
நடிகை ஆனார்.
இவர் 2012ஆம் ஆண்டு “சன் குடும்பம்”
விருதுகள் நிகழ்சியில் சிறந்த மருமகளுக்கான விருதை “நாதஸ்வரம்” என்ற தொடருக்காக வாங்கினார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டு இருக்கும் “மாமியார் தேவை” என்ற தொடரில்
“மீரா” என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், ஏதோ காரணமாக அந்த தொடரில் இருந்து அவர் விலகிக் கொண்டார். அதை தொடர்ந்து “வைதேகி” மற்றும் “உறவுகள்
சங்கமம்” போன்ற தொடர்களில் இவர் தற்பொழுது நடித்து வருகின்றார். சன் டிவியில் உயர்வு
என்ற இவர் நடிக்கும் தொடர் விரைவில் வெளிவரவிருக்கிறது.
“பாலு தம்பி மனசிலே”, “வேங்கை”,
“வெண்ணிலா கபடிகுழு” போன்ற படங்களில் நடித்துள்ளார்..
சுஹாசினி
இவர் இனிமையாக பாடக்கூடிய
வல்லமை படைத்தவர். “ABCD”, “பம்பரக்கண்ணாலே”, “ஆறு”, “தில்லுமுல்லு”, “தம்பிக்கு எந்த
ஊரு”, “ஜகன் மோகினி”. “நிமிர்ந்து நில்”, போன்ற படங்களில் நடித்தவர். விரைவில் வெளியாகவிருக்கும்
“பாலக்காட்டு மாதவன்”, “இத்தனை நாளாய் எங்கிருந்தாய்”, போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.
“மகள்”, “முகூர்த்தம்”, “வைரநெஞ்சம்”,
“சொர்க்கம்”, “நிம்மதி”, “தென்றல்” போன்ற ஏகப்பட்ட தொலைக்காட்சி தொடரில் இவர் நடித்துள்ளார்.
தற்சமயம் சன் டிவியில் வெளியாகும் “தெய்வமகள்” மற்றும் “பைரவி” மற்றும் ஜெயா டிவியில்
ஒளிபரப்பாகும் “அக்கா” முதலிய தொடரில் நடித்து வருகிறார். “சன் சூப்பர் குடும்பம் சீசன்
2” நிகழ்ச்சியில் சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றவர். சுமார் 20 வருடம் மெல்லிசை
பாடகியாக மேடைகளில் வலம் வந்த இவர் இதுவரை கிட்டத்தட்ட 3500 மேடைகளில் தோன்றி ரசிகர்களை தன் இனிமையான குரல் வளத்தால் தன்வசம் படுத்தியிருக்கிறார்.
K.T. ஜெயக்குமார்
மெல்லிசைக்குழுவில் கடந்த
17 வருடங்களாக பாடி வருகிறார். சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, குவைத். இலங்கை,
இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு எண்ணற்ற நட்சத்திர கலைவிழாக்களில்
பங்கு கொண்டுள்ளார். இசைத்துறையில் புகழ்ப்பெற்ற கலைஞர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
விஜய் ஜேசுதாஸ், ஹரிணி, மலேசியா வாசுதேவன், ஷங்கர் கணேஷ், அனுராதா ஸ்ரீராம், மனோ, எஸ்.ஜானகி
போன்றவர்களுடன் ஒரே மேடையில் பாடி அவர்களது பாராட்டுக்களைப் பெற்றவர். மெல்லிசை மன்னர்கள்
விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் கிரேஸ் கருணாஸ் இசைக்குழுவில் பாடியுள்ளார். இவர் தேர்ந்த
இசைஞானமும் இனிமையான குரல் வளமும் படைத்தவர்
பஹ்ரைன் தமிழ் சங்க
நிர்வாகக்குழுவினர் சார்பாக எதிர்வரும் ஜனவரி 9-ஆம் தேதி அனைவரையும் வருக வருகவென வரவேற்று நிகழ்ச்சியினை
சிறப்பித்துத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
வாழ்க தமிழ்!
1 comment:
Post a Comment