பாரதி தமிழ்ச்
சங்கம் நடத்திய “உழைப்பாளர் தினக் கொண்டாட்டம்” மே மாதம் வெள்ளிக்கிழமை 2-ஆம் தேதி
மாலை 6 மணிக்கு கோலாகலமான விழாவாக பஹ்ரைனில்
நடந்தேறியது. இந்தியச் சங்க திறந்த வெளியரங்கில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர் சகோதரர்கள்
பெருந்திரளாக வந்து கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
பஹ்ரைன் நாட்டு
அரச குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், இந்தியத் தூதரக
அதிகாரிகளும், ஏனைய இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளும்
கலந்துக் கொண்ட இவ்விழாவில், நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே தொழிலாளர் சகோதரர்களுக்கு
முக்கியத்துவம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.
பஹ்ரைன் நாட்டு
உள்ளாட்சித் துறை நகர்ப்புற திட்ட இயக்குனர் மாண்புமிகு ஷேக் ஹாமத் முஹம்மது அல் கலீஃபா
அவர்கள் கெளரவ விருந்தினராகவும், பஹ்ரைன் நாட்டுக்கான இந்தியத் தூதர் மாண்புமிகு முனைவர்
மோகன்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் தொழிலாளர்கள்
குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்த வைபவம் சிறப்பாக பேசப்பட்டது.
தங்களது உடலுழைப்பால்
இந்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று பாடுபடும் தொழிலாளர் சமூகத்திற்கு இந்த
அங்கீகார விழா சிறந்து எடுத்துக்காட்டு என்று எல்லோரும் பாராட்டு மழை பொழிந்தனர்.
32” LED தொலைக்காட்சி
பெட்டி, ஏராளமான கைப்பேசிகள், மின்னணு சாதனங்கள், வெள்ளி ஆபரணங்கள், வீட்டு உபயோக பொருட்கள்,
உணவுப் பொருட்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பரிசுப்பொருட்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.
மே மாதத்தில்
பிறந்தநாள் கொண்டாடும் தொழிலாளர்களை மேடைக்கு அழைத்து ‘கேக் வெட்டி’ பிறந்த நாள் கொண்டாட்டமும்
நடைபெற்றது. தொழிலாளர்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி பகிர்ந்து கொண்ட காட்சி
இதயத்தை நெகிழச் செய்தது.
தொழிலாளர் அன்பர்களை
மகிழ்விக்கும் வண்ணம் ஆடற் பாடல் நிகழ்ச்சிகள் களை கட்டியது. தமிழ்த்திரையுலக, சின்னத்திரை
மற்றும் வண்ணத்திரை கலைஞர்களின் நடனம் கண்கொள்ளாக்
காட்சியாக இருந்தது. இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமான துரைராஜன் மற்றும் திவ்யாஸ்ரீ
வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சி முத்தாய்ப்பாக அமைந்தது. “பழம் நீயப்பா!”, “அழகு மலர் ஆட”,
கண்ணை நம்பாதே” “சின்னஞ் சிறிய வண்ணப் பறவை” போன்ற பழைய பாடல்களும் “ஊதா கலரு ரிப்பன்”,
“கண்டாங்கி கண்டாங்கி”. போன்ற புதிய பாடல்களும் ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளிச் சென்றன.
இரண்டாயிரத்திற்கு
மேற்பட்ட தொழிலாளர்கள் திரளாக வந்து கலந்துக் கொண்டனர். துபாய், கதார், குவைத், சவுதி
அரேபியா போன்ற அண்டை நாடுகளிலிருந்து ஏனைய தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் விருந்தினர்களாக
வந்து கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர். .
நுழைவுக்கட்டணம்
ஏதுமின்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க தொழிலாளர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டிருந்தது..
‘மேதின’ நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தவறாமல் கொண்டாடுவதை பாரதி தமிழ்ச் சங்கம் வழக்கமாகக்
கொண்டுள்ளது. வெற்றிகரமாக அமைந்த இவ்விழா எல்லோருடைய பாரட்டுதலையும் பெற்றது.
No comments:
Post a Comment