Monday, January 12, 2015

பஹ்ரைன் நாட்டில் பொங்கல் திருநாள் - 2015

பஹ்ரைன் அரசாங்கத்து அதிகாரப்பூர்வமான அங்கீகாரப் பதிவு பெற்று, சமூக விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் பஹ்ரைன் வாழ் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு மையமாகத் திகழும் பஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழாவை ஜனவரி 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகலமான முறையில் கொண்டாடியது. வளைகுடா நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை தினம், ஆதலால் எல்லோரும் வந்து கலந்துக்கொள்ளும் வண்ணம் பொங்கல் பண்டிகை முன்கூட்டியே கொண்டாடப்பட்டது.  
.
பஹ்ரைன் இந்தியச் சங்கத்தின் (Indian Club) நூறாவது ஆண்டு தொடர் கொண்டாட்டத்தை முன்னிட்டு இவ்விழா மேலும் சிறப்பாக மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விழா வளாகத்தின் நுழைவாயிலை வாழைமரங்கள் அணிசேர்க்க, அரங்கமெங்கிலும் மாவிலைத் தோரணங்களும், மஞ்சள் கொத்துக்களும் அலங்கரிக்க,  வண்ண அலங்கார விளக்குகள் ஜொலிக்க, பூக்களால் ஜோடிக்கப்பட்டு  இந்தியச் சங்க வளாகமே விழாக்கோலம் பூண்டு களை கட்டியிருந்தது.

புத்தாடை உடுத்தி பூத்துக்குலுங்கும் புன்னகையோடு தமிழ் மக்கள் உலா  வந்த கண்கொள்ளாக் காட்சியை வருணிக்க வார்த்தைகள் இல்லை. ஆண்கள் பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்தும், பெண்கள் பட்டுச் சேலை உடுத்தியும், சிறுவர் சிறுமிகள் பட்டுப்பாவாடை சகிதம் வலம் வந்தது தமிழக மண்ணில் காணும் திருவிழாக்கோலத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது போலிருந்தது.

கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது விடியற்காலை 6.30 மணிக்கே மகளிர் அணியினர் திரண்டு வந்து கண்கவர் வண்ணங்களில் மாக்கோலமிட்டு வளாகத்தை அழகு படுத்தினர். தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் குத்து விளக்கேற்றி, புதுப்பானையில் புத்தரிசி பொங்கி, அது பொங்கி வழியும் நேரம் குறவை ஒலி எழுப்பி, பொங்கல் வழிபாடுகள் சிறக்க  “பொங்கலோ பொங்கல்” என்ற முழக்கத்தோடு கொண்டாட்டம் சீரும் சிறப்புமாக நடந்தேறியது.

 இந்தியாவிலிருந்து வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினர் திரு.மணிசங்கர் ஐயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். அவருக்கு பஹ்ரைன் தமிழ்ச் சங்கத் தலிவர் அப்துல் கையூம் மற்றும் நிறுவனர் முகம்மது ஹுசைன் மாலிம்  நினைவுக்கேடயம் வழங்கி கெளரவித்தனர்.

பஹ்ரைன் இந்திய தூதரக ஆலோசகர் திரு. ராம்சிங், இந்திய தூதரகத்தின் வணிகம் மற்றும் கலாச்சார முதன்மைச் செயலர் திரு, பிரமோத் குமார் ஷர்மா, இந்தியத் தூதுவரின் செயலாளர் திரு. பாலு ரமணி மற்றும் தூதரக உயர் அதிகாரிகள், இந்தியச் சங்க நிர்வாகிகள், சமுதாயத் தலைவர்கள், பிறமாநிலச் சங்கத் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய விருந்தினர்கள், விளம்பரதாரர்கள், சங்கத்தின் நலம்விரும்பிகள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து விழாவைச் சிறப்பித்தனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான “பிரவாசி பாரதிய திவஸ்” மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இந்தியத் தூதுவர் முனைவர் மோகன் குமார் அவர்கள் குஜராத் மாநிலம் காந்திநகர் சென்றிருந்தமையால் அவரால் பொங்கல் விழாவில் கலந்துக் கொள்ள இயலாமல் போய்விட்டது. அண்டை நாடுகளான சவுதி அரேபியா, கத்தார். துபாய் போன்ற நாடுகளிலிருந்து தமிழ்ச்சங்க நிர்வாகிகளும், தமிழார்வலர்களும் வந்திருந்தது விழாவுக்கு மேலும் மெருகூட்டியது.

பஹ்ரைன் தமிழ் சங்க நிர்வாகிகளின் சீரான வடிவமைப்பும், செயல் வீரர்களின் மும்முரமான களப்பணிகளிளும், தன்னார்வத் தொண்டர்களின் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பும்  விழாவை வெற்றிகரமாக நடத்த வழி வகுத்தன.

பஹ்ரைனில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் நிறுவன நிர்வாகத்தில் தலைமை பொறுப்பில் இருக்கும் தமிழுணர்வாளர்களின் பொருளதவியும், வலுவான ஒத்துழைப்பும் பொங்கல் விழாவின் மாபெரும் வெற்றிக்கு பேருதவி புரிந்தன.

உலகம் முழுவதும் பரந்து வாழுகின்ற தமிழர்களால் பொங்கல் பண்டிகை வளைகுடா, கீழைநாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது எல்லோரும் அறிந்ததே.

கடந்த பதினைந்து ஆண்டுகட்கும் மேலாக பொங்கல் விழா இதே இந்திய சங்கத்தின்  திறந்தவெளி அரங்கத்தில் பஹ்ரைன் தமிழ் சங்கம் இடைவிடாது தவறாமல் கொண்டாடி வருகிறது.

காலை முதல் இரவு வரை தொடர் நிகழ்ச்சியாக நடைபெற்ற இவ்விழா அனைத்து தரப்பினர்களின் ஏகோபித்த பாராட்டுதலையும் பெற்றுத் தந்தது.
சுமார் 3,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்நிகழ்ச்சிக்கு பெருந்திரளாக வந்து கலந்துக் கொண்டார்கள்.

முழுநாள் நிகழ்ச்சியாக நடந்தேறிய இவ்விழா மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது.

காலை நிகழ்ச்சியில் பெண்களுக்காக நடந்த கோலப்போட்டி, மற்றும் பொங்கல் பானை வைத்தவர்களுக்கு 22 கேரட் தங்கத்திலான லட்சுமி உருவம் பதித்த படம் பரிசாக வழங்கப்பட்டது.

ஆண்களுக்கென உரி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டி போன்ற வீர விளையாட்டுக்கள் நடைபெற்றன. கயிறு இழுக்கும் போட்டியில் ஆறு அணிகள் களமிறங்கின. இறுதிச் சுற்றுக்கு அறந்தாங்கி அணியும், பட்டுக்கோட்டை வருத்தப்படாத வாலிபர் சங்க அணியும் மோதின. இறுதியில் அறந்தாங்கி அணியினர் வெற்றி வாகை சூடி பரிசைத் தட்டிச் சென்றனர். கடந்த வருடமும் அறந்தாங்கி அணியே வெற்றி பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மகளிர் மற்றும் சிறுவர்களுக்கென நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் எண்ணற்ற பரிசுப் பொருட்களும், கலந்துக் கொண்ட சின்னஞ்சிறு சிறார்கள் அனைவருக்கும்  திடீர்ப் பரிசுகள் வழங்கப்பட்டன,

விழாவிற்கு வருகை தந்திருந்த அத்தனை தமிழன்பர்களுக்கும் தலைவாழை இலையோடு வடை பாயாசத்தோடு அறுசுவை மதிய உணவு பரிமாறப்பட்டது.
 .
மாலைப்பொழுதில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த சின்னத்திரை மற்றும் திரைப்படத்துறை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட மாபெரும் கலைவிழா நடைபெற்றது. மலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆடற் பாடல் நிகழ்ச்சிகளும், வாத்தியக்கலைஞர்கள் துணையோடு அரங்கேறிய மெல்லிசை நிகழ்ச்சியும் ரசிகர்களை பரவத்தில் ஆழ்த்தின. இரவு 10.00 மணிவரை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.


திருமதி ஹன்சுல் கனி நடன இயக்கத்தில் பரத நாட்டியத்துடன் மங்களகரமாக நிகழ்ச்சி தொடங்கியது. மேலும் பல திரையிசை நடனங்களும் அரங்கேறின.  காலத்தால் அழியாத பழைய பாடல்களும், மனதைத்தொடும் மெல்லிசை ராகங்களும், துள்ளல் இசையோடு கூடிய புதிய பாடல்களும், கிராமிய மணம் வீசும் நாட்டுப்பாடல்களும் ரசிகர்களின் காதுகளுக்கு விருந்தாக அமைந்தன.

தொகுப்பாளினி, பாடகி, நடிகை என்று பன்முகம் கொண்ட திரை நட்சத்திரமான ஸ்ரிதிகா தன் இனிமையான குரலால் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார். இவர் பாடிய “கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த சேலை” மற்றும் “புத்தம் புது காலை, பொன்னிற வேளை” போன்ற பாடல்ளுக்கு கிடைத்த கரகோஷம் வானைப் பிளந்தன. ஸ்ரிதிகா “மதுரை டூ தேனீ”  என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர். திருமுருகன் இயக்கி நடிக்கும் “நாதஸ்வரம்” என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். அந்த தொடரில் இவர்  “மலர்” என்ற மருமகள் பாத்திரம் ஏற்று நடித்ததன் மூலம் எல்லோருக்கு பரிச்சயமான நடிகை ஆனார். பற்பல தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். “பாலு தம்பி மனசிலே”, “வேங்கை”, “வெண்ணிலா கபடிகுழு” போன்ற படங்களில் நடித்துள்ளார்..

பொங்கல் விழா மேடையில் தன் பலதரப்பட்ட திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற மற்றொரு நடிகை சுஹாசினி. இவர் பழம்பெரும் பாடகி கே.பி.சுந்தரம்பாள் குரலில் உச்சதொனியில் பாடிய “காரைக்கால் அம்மையார்” படத்தில் இடம்பெற்ற “தக தகவென” என்ற பாடலும் “பூம்புகார்” படத்தில் இடம்பெற்ற “வாழ்க்கையெனும் ஓடம்” என்ற பாடலும் கேட்போரை பரவசத்திலாழ்த்தியது. மேலும் “Who is the Hero” போன்ற புதிய பாடல்களை அவர் ஆடிக்கொண்டே பாடிய தோரணை அசத்தலாக இருந்தது. இவர்  “ABCD”, “பம்பரக்கண்ணாலே”, “ஆறு”, “தில்லுமுல்லு”, “தம்பிக்கு எந்த ஊரு”, “ஜகன் மோகினி”. “நிமிர்ந்து நில்”, போன்ற படங்களில் நடித்தவர். விரைவில் வெளியாகவிருக்கும் “பாலக்காட்டு மாதவன்”, “இத்தனை நாளாய் எங்கிருந்தாய்”, போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். நிறைய தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நிகழ்ச்சியின் கதாநாயகனாக விளங்கியவர் பாடகர் K.T. ஜெயக்குமார். மூன்று மணி நேரம் ரசிகர்களை தன்வசம் கட்டுப்படுத்தி வைத்திருந்தார். மனதில் நிலைபெற்ற பழைய பாடல்கள் முதற்கொண்டு புதிய ‘கானா’ பாடல்கள் வரை உற்சாகமாக ரசிகர்களோடு ரசிகராக ஒன்றரக் கலந்து உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டார். இவர் பிரபலமான அனைத்து பின்னணி பாடகர்களுடனும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ஒரே மேடையில் பாடியவர் என்பது இங்கு குறிப்படத்தக்கது.


உள்ளூர்ப் பாடகர்களான ஜாபர் பாடிய “ராகங்கள் பதினாறு” மற்றும் “சங்கீத மேகம்” உள்ளிட்ட பாடல்கள் மனதைத் தொட்டன. ஜேசுதாஸ் குரலில் ஜெயக்குமார் வர்மா “பூவே செம்பூவே” என்ற பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

பாரதி தமிழ்ச் சங்கம் இவ்வருடம் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவானது எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக அமைந்தது. எல்லோருடைய ஏகோபித்த பாராடுதல்களையும் பெற்றது. கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் அரங்கம் நிரம்பி வழிந்து வாசற்கதவு மூடப்பட்டதால் தாமதமாக வந்த ஏராளமான ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.



உள்ளுர்ப் பத்திர்க்கைகள் யாவும் தமிழர்களின் பொங்கல் பண்டிகை சிறப்பாக நடந்த செய்தியை முக்கியத்துவம் தந்து பதிப்பித்திருந்தனர். சுருக்கமாகச் சொன்னால் இவ்விழா எல்லோராலும் புகழ்ந்து பேசப்பட்ட நிகழ்ச்சியாக நடந்தேறியது.      

1 comment:

கொளக்குடிமாறன் said...

மிக அருமையாக பொங்கல் பண்டிகை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தீர்கள்
பாரதி தமிழ் சங்க நிர்வாகிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்

நன்றி! நன்றி!! நன்றி!!!

மேற்கூறிய நிகழ்ச்சி அனைத்தையும் நேரில் கண்டுகளித்த ஒரு ரசிகன்