பஹ்ரைன் நாட்டில் பொங்கல் திருநாள் - 2015

பஹ்ரைன் அரசாங்கத்து அதிகாரப்பூர்வமான அங்கீகாரப் பதிவு பெற்று, சமூக விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் பஹ்ரைன் வாழ் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு மையமாகத் திகழும் பஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழாவை ஜனவரி 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகலமான முறையில் கொண்டாடியது. வளைகுடா நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை தினம், ஆதலால் எல்லோரும் வந்து கலந்துக்கொள்ளும் வண்ணம் பொங்கல் பண்டிகை முன்கூட்டியே கொண்டாடப்பட்டது. . பஹ்ரைன் இந்தியச் சங்கத்தின் (Indian Club) நூறாவது ஆண்டு தொடர் கொண்டாட்டத்தை முன்னிட்டு இவ்விழா மேலும் சிறப்பாக மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழா வளாகத்தின் நுழைவாயிலை வாழைமரங்கள் அணிசேர்க்க, அரங்கமெங்கிலும் மாவிலைத் தோரணங்களும், மஞ்சள் கொத்துக்களும் அலங்கரிக்க, வண்ண அலங்கார விளக்குகள் ஜொலிக்க, பூக்களால் ஜோடிக்கப்பட்டு இந்தியச் சங்க வளாகமே விழாக்கோலம் பூண்டு களை கட்டியிருந்தது. புத்தாடை உடுத்தி பூத்துக்குலுங்கும் புன்னகையோடு தமிழ் மக்கள் உலா வந்த கண்கொள்ளாக் காட்சியை வருணிக்க...