Monday, December 31, 2012

பொங்கல் 2013




இந்த ஆண்டு பஹ்ரைன் நாட்டில் பாரதி தமிழ்ச் சங்கம் தைப்பொங்கல் நிகழ்ச்சியை கோலாகலமான விழாவாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய சங்க வளாகத்தில் காலை முதல் இரவு வரை முழுநாள் கொண்டாட்டமாக பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன.

வளாக அரங்கம் வாழைமரம் மற்றும் மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும். வண்ணக்கலவையில் வார்க்கப்பட்டிருக்கும் மாக்கோல வரைவுகள் வருவோரைக் கவரும் வண்ணமிருக்கும். பாரம்பரிய வேட்டியில் வீரமறவர்களும், பட்டுச் சேலையில் மாதர்குலப் பெண்டீரும், பாவடை தாவணியில் சிறுமிகளும் ஒய்யாரமாக வலம் வரும் கண்கொள்ளாக்காட்சி நம்மை ஊர் நினைவுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் செல்லும்.

காலை 10.30 மணிக்கு கோலம் மற்றும் பொங்கல் புதுப்பானை நிகழ்ச்சியுடன் சடங்குகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து உறியடித்தல், கயிறு இழுக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம் முதலான ஆண்களுக்கான வீர விளையாட்டுக்களுடன், குழந்தைகளுக்கான பலதரப்பட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறும். ஏராளமான பரிசுகள் காத்திருக்கின்றன. பகற்பொழுதில் பிரத்தியேகமான முறையில் தயாரிக்கப்பட்டு, தலைவாழை இலை போட்டு, வடை பாயாசத்தோடு அறுசுவை விருந்தோம்பல் பரிமாறப்படும்.

ஆண்டுதோறும் தைப்பொங்கல் நிகழ்ச்சியினை பாரதி தமிழ்ச் சங்கம் சிறப்பாக கொண்டாடி வருவது நாமெல்லோரும் அறிந்ததே. இவ்வாண்டு தமிழர்களின் கலை, இலக்கியம் பாண்பாட்டினை மையப்படுத்தும் வகையில் சிறப்பாக கொண்டாட திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

80-ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழும் பஹ்ரைன் நாட்டில், தமிழர் பண்பாட்டை உலகறியச் செய்யும் வண்ணம் மண்வாசனை கமழும்  பல்வேறு தமிழிசை நிகழ்ச்சிகள் பாரதி தமிழ்ச் சங்கம் தொடர்ச்சியாக அவ்வப்போது அரங்கேற்றி வருகின்றது



"விஜய்" மற்றும் "மக்கள்" தொலைக்காட்சி புகழ் "பூபாளம் கலைக்குழு"வினரின் கலைநிகழ்ச்சி இவ்வாண்டு மனதில் நிலைத்து நிற்கும்  நிகழ்ச்சியாக அமையும் என்பதில் சற்றும் ஐயமில்லை. இது சிரிக்கவும் சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சியாகவும் அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டு பாரம்பரிய இசைக்கருவிகளுடன் இக்குழுவினர் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சியானது, கடந்த 15 ஆண்டுகட்கு மேலாக "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்" கலைஇரவு நிகழ்ச்சிகளில் அமோக ஆதரவைப் பெற்று வருகிறது. பொதுமக்கள் விடிய விடிய விழித்திருந்து இரசித்து மகிழ்கின்றனர். இக்குழுவினர் மேலைநாடுகள் முழுதும் பயணம் மேற்கொண்டு தமிழ் கலாச்சாரத்தை பரப்பி வருகின்றனர்.  பிரகதீஸ்வரன் நாடகக் கலைஞர் மட்டுமன்றி பாடற் கலைஞராகவும், சமுதாயச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் சமூக ஆர்வலராகவும் தொண்டாற்றி வருகிறார்.


மேளதாளத்துடனும் சினிமா, நையாண்டி மற்றும் நாட்டுப்புற  பாடல்களோடு அரங்கேறும் ஆடல்-பாடல் நிகழ்ச்சியானது நடைமுறை  அவலங்களை படம்பிடித்துக் காட்டுவதோடல்லாமல் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாகவும் இருக்கும். சின்னத்திரை புகழ் பிரகதீஸ்வரன் தலைமையில் பஹ்ரைன் வருகை தரும் பூபாளம் இசைக்குழுவில் செந்தில் இடம் பெற்றுள்ளார், இவர்களின் கோணங்கி சேஷ்டைகளும், நகைச்சுவை உரையாடல்களும், நையாண்டி பேச்சுகளும், சமுதாயச் சீர்கேடுகளை விளாசும் சீர்நோக்கு கருத்துக்களும் நம் சிந்தனைக்கு விருந்தாக அமையும் என்பது திண்ணம். மேலும், திறன்மிக்க பாடகரான கரிசல் ப.திருவுடையானின் வெண்கலக் குரலோசையில் இசைக்கப்படும் தமிழிசை பாடல்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.


இந்நிகழ்ச்சிக்கு அண்டை நாடான சவுதி அரேபியாவிலிருந்து வழக்கம்போல் தமிழ் ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொங்கல் விருந்துக்கான கூப்பன் பெற பாரதி தமிழ்ச்சங்க நிர்வாகிகளை அணுகவும். கலைநிகழ்ச்சி மாலை 6.30 மணிக்குத் தொடங்கும். நுழைவுக் கட்டணம் கிடையாது. பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பிக்க தமிழர்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்கின்றோம்.

தொடர்பு கொள்ள : 39404100, 39628773, 39873488 & 39447151



தொடர்புடைய சுட்டி :

கரிசல் ப.திருவுடையான் பாடல்கள் 

பிரகதீஸ்வரனைப் பற்றி "என் விகடன்"




No comments: