கடந்த வெள்ளிக்கிழமை மே நாலாம் தேதி பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் நினைவாக பாரம்பரிய தமிழிசை நிகழ்ச்சி, இந்திய சங்கம் அரங்கத்தில், பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறியது. மறைந்த இசை மேதைக்கு சமர்ப்பணம் அளிக்கும் வகையில் அவர்களின் பிரபலமான பாடல்கள் பஹ்ரைன்வாழ் இசைக்கலைஞர்களால் ஒருங்கிணைந்து இசைக்கப் பட்டன.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. சங்கச் செயலாளர் கபீர் அஹ்மது பாரதி தமிழ்ச் சங்கத்தை பற்றிய அறிமுகம் வழங்க, வரவேற்புரையை சங்கத்து கேளிக்கை செயலாளர் பெரியசாமி கோவிந்தன் வழங்கினார். பாரதி தமிழ்ச் சங்கத் தலைவர் முஹம்மது ஹுசைன் மாலிம் தனது இளம்பிராய நினைவுகளை எம்.எஸ்.அம்மாவின் சிறப்புகளை தொடர்புபடுத்தி சொற்பொழிவாற்றினார். இசைக்குயிலின் மேன்மைகளை அவரது பாடலின் அரும்பொருளை ஆய்வுச் செய்து ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களைப் பற்றிய அறிமுகவுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி வழங்க துணைபுரிந்த்த உபயதாரர் பற்றிய குறிப்புகளை துணைச் செயலாளர் சரவணன் வழங்கினார்.
பஹ்ரைன் நாட்டின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் திருமதி சங்கீதா ராம்பிரசாத், திருமதி இந்து சுரேஷ், திருமதி டாக்டர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி, திருமதி கிருத்திகா ராம்பிரசாத், திருமதி சுமா உன்னி கிருஷ்ணன் ஆகியோர் வாய்ப்பாட்டு பாடினார்கள்.
வயலின் : திருமதி அர்ச்சனா கிருஷ்ணகுமார், மிருதங்கம் : திரு கிருஷ்ணகுமார், தபேலா : திரு சேது மாதவன், மோர்சிங் & கஞ்சிரா : பாலகிருஷ்ணன் இவர்கள் இசைக்க கச்சேரி களை கட்டியது.
'குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா', 'காற்றினிலே வரும் கீதம்', 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே', 'வாழிய செந்தமிழ்' போன்ற பாடல்கள் வெகுவாக ரசிகர்களை மெய்மறக்கச் செய்தன. நிகழ்ச்சி முடியும்வரை கூட்டம் கலையாமல் அமைதியுடன் அமர்ந்து ரசித்த காட்சி, இசை ஆர்வலர்கள் இசையோடு கலந்து போயிருந்ததை எடுத்துக் காட்டியது.
இசையரசியின் வாழ்நாளில் நடைபெற்ற சுவையான சம்பவங்கள், அவரது சாதனைகள் இவைகளை கோர்வைபடுத்தி சிறப்பான காணொளி பொருளாளர் முகம்மது சலீம் அவர்களால் ஏற்பாடு செய்திருந்தது மாபெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. 600-க்கும் மேற்பட்ட இசை ரசிகர்கள் பெருந்திரளாக வந்திருந்து சிறப்பித்தது மறைந்த இசைமேதைக்குச் செய்யும் மாபெரும் அஞ்சலியாக சாட்சி கூறியது.
இடையிடையே பாடலுக்கான அறிமுகத்தை கலைநயத்துடன் தனது இனிய குரலால் தொகுத்து வழங்கியவர் திருமதி நிஷா ரங்கராஜன். நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மி நரசிம்மன் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.
No comments:
Post a Comment