Monday, January 16, 2012
பஹ்ரைன் நாட்டில் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்திய மாபெரும் பொங்கல் திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் மிகச் சிறந்த முறையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பஹ்ரைன் நாட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழர்களின் பண்பாட்டு மையமான பாரதி தமிழ்ச் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை வருடந்தோறும் சீரும் சிறப்புமாக செய்து வருகிறது.
பஹ்ரைன் நாட்டில் கிட்டத்தட்ட 60,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நாட்டில் இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றிருக்கும் திரு.மோகன் குமார் அவர்கள் ஒரு தமிழர் என்பது பெருமைக்குரியதாகும்.
ஜனவரி 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை ஆதலால் பொங்கல் கொண்டாட்டம் இந்த தினத்தன்று கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
விடியற்காலை மகளிர் அணியினர் மாக்கோலம் இட வண்ணமயத்துடன் பெங்கல் விழா களைகட்டத் துவங்கியது. காலை 10 மணிக்கு இந்திய சங்கத்தின் திறந்தவெளி அரங்கத்தில் ஆண்களுக்கான வீர விளையாட்டுகள், குழந்தைகள் மற்றும் மகளிருக்கான போட்டிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனங்கள் போன்றவை இடம் பெற்றன. பாரதி தமிழ்ச் சங்கத்தின் பெண் உறுப்பினர்கள் ஒன்றுகூடி கூட்டுப் பொங்கல் வைத்து, இறைவனை வழிபட்டு, குறவையிட்டு "பொங்கலோ பொங்கலென" குரலெழுப்பி தங்கள் மகிழ்ச்சியை ஆராவாரத்துடன் வெளிப்படுத்தினர்.
இந்தியத் தூதுவர் திரு.மோகன் குமார் அவர்களின் முன்னிலையில் இந்தச் சம்பிரதாயச் சடங்குகள் மற்றும் வைபவங்கள் நடந்தேறின. பஹ்ரைன் வாழ் இந்தியச் சமுதாயத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். பஹ்ரைன் நாட்டின் எட்டுதிக்கெங்கிலும், மற்றும் அண்டை நாடான சவுதி அரேபியாவிலிருந்த்தும் தமிழ் மக்கள் பெருந்திரளாக திரண்டு வந்து நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
மாலை 6.30 மணிக்கு "சென்னை ரிதம்" என்று பெயரிடப்பட்ட இசை நிகழ்ச்சி மேடையில் அரங்கேறியது. "திருமதி செல்வம்" மற்றும் "செல்லமே" புகழ் சின்னத்திரை தாரகை காவ்யா தனது இனிய குரலால் பாடியும் ஆடியும் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். "மாந்தன்" பட கதாநாயகி கன்னல், கலா மஸ்டரிடம் பயிற்சி பெற்ற சமீர், மற்றும் பஹ்ரைன் நடனக் கலைஞர் சுந்தர் இவர்களுடன் இணைந்து ஆடிய நடனங்கள் பலத்த கைத்தட்டலையும் கரகோஷத்தையும் பெற்றுத் தந்தது.
இசைக் கலைஞர் ரபீக் தலைமையில் வாத்தியக் கலைஞர்கள் இசைத்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாடகர்கள் ஜாபர், மூவேந்தன், பாண்டியன், வர்மாவுடன் பாடகிகள் காவ்யா, ரெஜினா மற்றும் ஆஷா இணைந்து பாடி ரசிகப் பெருமக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். சந்த்தோஷ் அவர்களின் சிவாஜி நடிப்பு பாரட்டத்தக்கதாய் இருத்தது. ஏறக்குறைய 4,000 க்கும் மேற்பட்ட தமிழ் ரசிகர்கள் அலைகடலென திரண்டு வந்து அரங்கை நிரப்பினர்.
பஹ்ரைனில் அண்மையில் நடந்த விழாக்களிலே இது மிகப் பிரமாண்டமான விழாவாக பரவலாக பேசப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment