Thursday, September 29, 2011

தமிழர் திருவிழா - ஜெமினிக்கு அஞ்சலி



காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு, அவர் நடித்த படங்களின் சுவையான காட்சிகள், நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள், வாழ்நாள் சாதனை முதலியவை ஆவணப்படமாக பெரிய திரையில் திரையிடப்பட உள்ளது


இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன்
நாள் : சனிக்கிழமை 9.10.2011
நேரம் : மாலை 8.00 மணி



ஜெமினி கணேசனின் வாழ்க்கைக் குறிப்பு


தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா சரித்திரம் மிஸ்மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.

அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் "காதல் மன்னன்" என்றே அழைத்தனர். இந்நிலையில் அவருடைய தபால்தலை வெளிவந்திருப்பதும் அவர்தம் கலைத் திறனுக்கு ஒரு சான்றாக விளங்குகிறது.

அவரைப் பற்றிய சில சுவையான செய்திகள்


சிலஆரம்பகாலப் படங்களில் ஜெமினி கணேசனின் பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. பராசக்தி (திரைப்படம்) மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர் கொண்டிருந்தமையால், மாறுபடுத்துவதற்காக, இவர் தனது பெயருடன் தனது தாய் நிறுவனத்தின் பெயரை இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.

ஜெமினி கணேசன் தயாரித்த ஒரே படம் நான் அவனில்லை. இது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றாலும், வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப்படம் தமிழிலேயே ஜீவன் நடிப்பில், செல்வா இயக்கத்தில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றி கண்டது.

ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் இதய மலர். கமல்ஹாசன் மற்றும் சுஜாதாவுடன் இதில் அவரும் நடித்திருந்தார். ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த தாமரை மணாளன் இணைந்து இயக்கியிருந்தார்.

தாய் உள்ளம் படத்திற்குப் பிறகு ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த (அநேகமாக) ஒரே படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "வல்லவனுக்கு வல்லவன்". இதில் ஜெமினி கணேசன் எதிர்பாராத விதமாக இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார் என்பதும், வில்லனாக அறியப்பட்டிருந்த அசோகன் இதன் கதாநாயகன் என்பதும், துவக்கத்தி்ல் வில்லன் போலக் காணப்படும் மனோகர் காவல்துறை அதிகாரியாக வெளிப்படுகிறார் என்பதும் சுவையானவை. இத்திரைப்படத்தில் ஒரே ஒரு பாடற்காட்சியில் சாவித்திரி கௌரவ நடிகையாகத் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெமினி கணேசன் சொந்தக் குரலிலும் அற்புதமாகப் பாடக் கூடியவர் என்றும், அந்நாளைய இந்திப் பாடகர் சைகால் பாடல்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடுவது அவர் வழக்கம் என்றும் அவரது பல பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தாம் இயக்கிய "இதயமலர்" திரைப்படத்தில் "லவ் ஆல்" என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இதுதான்.

ஜெமினி கணேசன் இந்தி மொழியை மிக நன்றாக அறிந்திருந்தமையால், 1980ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான ஹம்லோக் சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் அவர் தமிழில் முன் கதைச்சுருக்கம் அளித்தார்.

இந்திப் படவுலகில் நுழைந்து 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருந்த ரேகா தாம் ஜெமினி கணேசன் - புஷ்பவல்லியின் மகள் என அறிவித்தார். ஜெமினி இதை ஒப்புக் கொண்டார்.

ரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகவில்லை அல்லது புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக நினைவெல்லாம் நித்யா என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு அளித்துள்ளார்.

ஜெமினி கணேசனின் மகளான கமலா செல்வராஜ் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவச் சிகிச்சை முறைமையின் முன்னோடிகளில் ஒருவராக பெரும் ஆராய்ச்சிகளும், பங்களிப்பும் அளித்துள்ளார்.

No comments: