அரேபிய தமிழக வணிக கலாச்சார தொடர்புகள் - ஒரு வரலாற்றுப் பார்வை டாக்டர் ஜெ.ராஜா முகமது, M.A. (Hist), M.A. (Arch), M.A. (Anth), BGL.,PhD முன்னாள் காப்பாட்சியர் அரசு அருங்காட்சியகம், புதுக்கோட்டை தமிழ்நாடு, இந்தியா தமிழகத்திற்கும், அரேபியாவிற்கும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத் தொடர்பு இருந்து வந்தது. அரேபியர் தொகுத்து வைத்திருந்த புவியியல் செய்திகளும், பல்வேறு நாடுகளின் கடல் வரைபடங்களும் அவர்களது திரைகடலோடும் திறமைக்கு தக்க வழிகாட்டிகளாக அமைந்து, அவர்கள் கடல் சார்ந்த தொழில்களை (பிற நாட்டுடன் வணிகம், முத்துக் குளித்தல், மீன் பிடித்தல் போன்றவை) சிறப்பாக மேற்கொள்ள காரணமாக இருந்தது. பஹ்ரைன், ஏமன், ஹோர்முச், ஆகிய நாட்டு துறைமுகங்களிலிருந்து புறப்பட்ட அரேபிய கப்பல்கள், இந்திய நாட்டுக் கடலில் வலம் வந்தன. அரேபிய தென்முனைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டக் கப்பல்கள், 47 நாட்களில் தமிழகத்தின் வட எல்லையைத் தொட்டன. அரேபிய வணிகர்கள் பொன்னையும், புதுமை பொருட்களையும், மிளகு, முத்து ஆகியவற்றையும் பெற்றுச் சென்றனர். இவ்வாறாக தமிழகத்தின் வணிகப் பொருட்கள் அரேபிய வணிகர்களின் மூலமாக உலகின் பல பகுதிகளுக்கும் ச...