
தமிழ் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வரும் பாரதி தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் மென்மேலும் பெருகி வருவதற்கு இம்மண்ணில் வசிக்கும் உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும், தமிழுணர்வும் ஒரு தலையாய காரணம். “வாசகர் வட்டம்” என்ற பெயரில் 36 வருடங்கட்கு முன்பு சிறிய குழுவாய் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு “தமிழ் மன்றம்”, “தமிழ் சங்கம்”, என பல்வேறு பரிணாமங்கள் பெற்று, இன்று “பாரதி தமிழ் சங்கம்” என்ற பெயரில் இந்த பஹ்ரைன் நாட்டில் தன்னிகரில்லா தமிழ்ச் சேவை புரிந்து வருகின்றது. இயல், இசை, நாடகம், நாட்டியம், விளையாட்டு, சமூகப் பணி என அனைத்து துறைகளிலும் களம் கண்டு நாம் சாதனைகள் புரிந்து வருகிறோம். இலக்கியப்பணி நம் இடையறாத பணியாக இன்றளவும் இருந்து வருகிறது. இன்பத் தமிழின் சுவையை பருகுவதற்கு நாம் எத்தனையோ இலக்கியச் செல்வர்களை இங்கு அழைத்து வந்து சொற்பொழிவாற்ற வைத்திருக்கிறோம். தமிழறிஞர் கலாநிதி எம்.சுக்ரி, தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, கவிக்கோ அப்துல் ரகுமான் , கவிஞர் நந்தலாலா, பார...