Monday, December 28, 2015
Thursday, December 24, 2015
2016 பொங்கல் விழா
எதிர்வரும் ஜனவரி திங்கள் 15-ஆம் தேதியன்று பாரதி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பஹ்ரைன் இந்தியன் கிளப் அரங்கில் மாலை 7 மணிக்கு மாபெரும் இலக்கியச் சொற்பொழிவு நடைபெறவுள்ளது. தமிழுணர்வு கொண்ட அனைவரும் திரளாக வந்திருந்து நிகழ்ச்சியினை சிறப்பிக்க வேண்டுகிறோம். (அனுமதி இலவசம்)
முனைவர் பர்வீன் சுல்தானா
பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், பெண்ணியவாதி, சமூக ஆர்வலர் எனப் பலவாறாக அறியப்படுபவர்
உலகெங்கும் பயணம் செய்து கன்னித்தமிழின் பெருமையை தமது கனல் தெறிக்கும் பேச்சின் மூலம் நிலைநாட்டி வருபவர்
சென்னை நீதிபதி பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை துணைபேராசிரியராக பணியாற்றிவரும் முனைவர் பர்வீன் சுல்தானா, கம்பன் விழா , பட்டிமன்றம், சுழலும் சொற்போர், வழக்காடு மன்றம் போன்ற நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு கம்பன் புகழ்பாடி தன் தமிழாற்றலை தரணியெங்கும் தடம்பதித்து வருகின்றார்.
ஒவ்வொரு மேடையிலும் சமூக விழிப்புணர்வுடன் கூடிய இலக்கிய உரைகளை ஆற்றிவரும் இவர், தனது கணவர் நடத்திவரும் தமிழியல் ஆய்வு நிறுவனத்திற்காக ஆய்வேடுகளை புத்தகமாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். 60-க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்ற இவரை பாண்டிச்சேரி தமிழ் இலக்கிய மன்றம் “இலக்கிய மாமணி”. என்ற பட்டத்தை அளித்து கெளரவித்தது.
விஜய் தொலைக்காட்சியின் 2013-ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் விருது இவருக்கு கிடைத்தது. ஓராண்டு காலம் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியின் நடுவராக திறம்பட பணியாற்றியவர் இவர்.
நாடறிந்த நற்றமிழ் ஆர்வலர். பாட்டுக்கோர் புலவன் பாரதி கனவு கண்ட புதுமைப் பெண் இவரென்றால் அது மிகையாகாது.
முனைவர் பி.சரோன் செந்தில் குமார்
இலக்கிய ஆர்வலர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர். ஆவணப் படத் தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், ஊடகவியலாளர், என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்தவர்.தூரதர்ஷன் ஒளிபரப்பிய “காலைக் கதிர்”, “காலைத்தென்றல்”, “நிழலும் நிஜமும்”, “வெள்ளி மலர்கள்” “ஒலியும் ஒளியும்”, போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர். “தண்ணிர் விட்டோ வளர்த்தோம்”., “ஹலோ உங்களுடன்”, “தெரியுமா உங்களுக்கு”, “தேனருவி”, போன்ற நிகழ்ச்சிகள் இவருக்கு புகழைத் தேடித் தந்தது.
“என்னைக் கவர்ந்தவர்கள்”, “நம் விருந்தினர்” ஆகிய சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிரபல எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், போன்றவர்களை பேட்டி கண்டு அவர்களின் திறமையை நாடறியச் செய்தவர்.
“முதல் முத்திரை” நிகழ்ச்சியின் வழியாக திரைப்படத்துறையில் முன்னுக்கு வந்த இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் போன்றவர்களை அழைத்து பேட்டி கண்டு அவர்களது முதல் அனுபவங்களை வெளிக்கொணர்ந்தவர்.
“சாதனை மனிதர்கள்” என்ற ஆவணப்படத்தின் வாயிலாக நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டாக்டர் மு.வரதராசனார் போன்றவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை படம்பிடித்துக் காட்டியவர்.
ஜெயா டிவி, ராஜ் டிவி, கேப்டன் டிவி நடத்தும் விவாத மேடைகளில் தவறாமல் கலந்துக் கொண்டு தன் வீரியமிக்க கருத்துக்களை பதித்து வருகிறார்.
தெருக்கூத்து, குகை ஓவியங்கள், கல்வெட்டுக்கள் போன்றவற்றை கருவாக வைத்து ஆய்வு செய்து ஆவணப் படங்கள் தயாரித்து அரும்பணி ஆற்றிவருகிறார்.
அண்மையில் தமிழ்த் திரையுலகில் புரட்சிக் கருத்துக்களை வித்திட்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை ஆவணப்படமாக தயாரித்துள்ளார். இது சென்னை மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டது. நமது பொங்கல் நிகழ்ச்சியின்போது இப்படம் பஹ்ரைனில் திரையிடப்படும்.
Subscribe to:
Posts (Atom)
-
சமய நல்லிணக்க இஃப்தார் விருந்து 2025 பஹ்ரைன் சமூக நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயற்படும், முறையாக பஹ்ரைன் அரசாங்கத்தில் பதிவு ச...
-
வேலை பளுவைக் களைந்து பாலைவன முகாமில் மகிழ்ந்து சுட்டகோழி விருந்து களைப்புற்ற மனதுக்கு இதமான மருந்து எல்லோரும் இன்புற்றுச் சென்றனர் மனம் ...