Monday, May 24, 2010

தொழிலாளர் தின கொண்டாட்டம்








23, மே - மனாமா, பஹ்ரைன்.

பஹ்ரைன் நாட்டின் தமிழர்கள் நலன் காக்கும் அதிகாரப்பூர்வமான அமைப்பான பாரதி தமிழ்ச்சங்கம் மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் தினம், கடந்த வெள்ளிக்கிழமை 21-ஆம் தேதியன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஈஸா டவுன் இந்தியப் பள்ளி அரங்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

சொகுசுப் பேருந்தில் அழைத்து வரப்பட்ட 1500 -க்கும் அதிகமான தொழிலாளர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். பன்னீர் தெளித்து, சந்தனம், கற்கண்டு, வழங்கி தமிழ்க் கலாச்சார முறையில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் கையாலேயே குத்துவிளக்கு ஏற்றப் பட்டு அவர்களுக்கு முதல் மரியாதை அளித்து நிகழ்ச்சி தொடங்கப்பட்ட விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்தியத் தூதுவர் மேதகு டாக்டர் ஜார்ஜ் ஜோஸப் அவர்கள் முக்கிய விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். பஹ்ரைன் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முன்னாள் முதன்மைச் செயலர் மாண்புமிகு மஹ்மூது அல் மஹ்மூது கெளரவ விருந்தினராக கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

ஏராளமான பரிசுப் பொருட்கள் தொழிலாலர்களுக்கு அள்ளி வழங்கப்பட்டன.

இசைக்குழுவோடு பாரதி தமிழ்ச் சங்கத்தின் திறம் வாய்ந்த கலைஞர்கள் மெல்லிசை நிகழ்ச்சி வழங்கினார்கள். பஹ்ரைன் நாட்டின் புகழ்பெற்ற நடனக்கலைஞர்கள் வடிவமைத்த திரைப்பட நடனம், கரகாட்டம் மற்றும் நாட்டுப்புற கலைகள் மேடையில் அரங்கேற்றப்பட்டன.

மேடையில் மே மாதம் பிறந்தவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அறுபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் கலந்துக் கொண்டனர். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி அவர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்க முதல் இறுதிவரை களை கட்டியிருந்த விழா கொண்டாட்டத்தில், தொழிலாளர்கள் தங்கள் கவலைகளை மறந்து ஆடியும் பாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது காண்போர் மனதைக் கவர்ந்தது.

விபத்தில் கால் இழந்த ராம் அவதார் ஷர்மா என்ற தொழிலாளருக்கு ரூ 3 லட்சத்திற்கான (2500 பஹ்ரைன் தீனார்) காப்புறுதித் தொகையை மேதகு இந்தியத் தூதுவர் டாக்டர் ஜார்ஜ் ஜோஸப் அவர்கள் விழா மேடையில் வழங்கினார். பஹ்ரைன் நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டில் நமது தொழிலாளர் சகோதரர்களின் பங்களிப்பு கணக்கிலடங்காது என்று எடுத்துரைத்தார்.

இந்தியத் தூதுவர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப் மற்றும் பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முகம்மது ஹுசைன் மாலிம் அவர்கள் உரையாற்றுகையில் கூட்டுக் காப்பிட்டுத் திட்டத்தின் அவசியத்தை தொழிலாளர்களுக்கு எடுத்துரைத்தனர். மிகக் குறைந்த மதிப்பில், ஆண்டு தவணைக் கட்டணம் அரை தீனார் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த திட்டத்தில் இணைய வேண்டி விண்ணப்பப் படிவத்தை தொழிலாளர்கள் பேரார்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

சுகாதார முறையில் சுவையாக தயாரிக்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டன. இரவு 9.30 மணிக்கு விழா இனிதே முடிவுற பூரிப்போடு தொழிலாளர்கள் விடு திரும்பிய காட்சி உள்ள நிறைவைத் தந்தது.