Wednesday, January 13, 2016


தமிழ் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வரும் பாரதி தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் மென்மேலும் பெருகி வருவதற்கு இம்மண்ணில் வசிக்கும் உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும், தமிழுணர்வும்  ஒரு தலையாய காரணம்.

“வாசகர் வட்டம்”  என்ற பெயரில் 36 வருடங்கட்கு முன்பு சிறிய குழுவாய் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு “தமிழ் மன்றம்”, “தமிழ் சங்கம்”, என பல்வேறு பரிணாமங்கள் பெற்று, இன்று  “பாரதி தமிழ் சங்கம்” என்ற பெயரில் இந்த பஹ்ரைன் நாட்டில் தன்னிகரில்லா தமிழ்ச் சேவை புரிந்து வருகின்றது.

இயல், இசை, நாடகம், நாட்டியம், விளையாட்டு, சமூகப் பணி என அனைத்து துறைகளிலும் களம் கண்டு நாம் சாதனைகள் புரிந்து வருகிறோம்.

இலக்கியப்பணி நம் இடையறாத பணியாக இன்றளவும் இருந்து வருகிறது. இன்பத் தமிழின் சுவையை பருகுவதற்கு நாம் எத்தனையோ இலக்கியச் செல்வர்களை இங்கு அழைத்து வந்து சொற்பொழிவாற்ற வைத்திருக்கிறோம்.

தமிழறிஞர் கலாநிதி எம்.சுக்ரி, தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி,  கவிக்கோ அப்துல் ரகுமான் , கவிஞர் நந்தலாலா, பாரதி கிருஷ்ணகுமார், நாஞ்சில் சம்பத், எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன் போன்ற சொற்பொழிவாற்றல் மிகுந்த வல்லுனர்களை அழைத்து வந்து இலக்கியக் கூட்டம் நடத்தினோம். அவ்வரிசையில் இப்போது முனைவர் பர்வீன் சுல்தானா மற்றும் முனைவர் பி,சரோன் செந்தில் குமார் அவர்களும் இடம் பெற்றுள்ளனர்,  

கலைத்துறையில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள், இசையமைப்பாளர்கள், நாட்டுப்புற பாடல்களை மேடையில் முழங்கும் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி, தமிழ்நாடு எழுத்தாளர் முற்போக்கு சங்கம் புகழ் புதுகை பூபாளம் கலைக் குழுவினர், அரசியல் பிரபலங்கள் என அனைத்து துறை வல்லுனர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம். நலிவடைந்த நாட்டுபுற கலைஞர்களுக்கும் ஆதரவு அளித்து வந்துள்ளோம்.

பாரதி தமிழ்ச் சங்கம் விளையாட்டுத் துறைகளில் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் எத்தனையோ வெற்றிகளைக் குவித்து, இந்த முத்துத் தீவில் முத்திரை பதிந்து வந்துள்ளது

பழம்பெரும் நாடகக் கலைஞர்களான நீலு, ஏ.ஆர்.எஸ். போன்றவர்களை வரவழைத்து விருதுகள் வழங்கி கெளரவித்திருக்கிறோம். நாம் மேடையேற்றிய  அத்தனை நாடகங்களும் பெருத்த வரவேற்பினை பெற்றன என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக நாம் நடத்திய  மாபெரும் கர்னாடக இசைக் கச்சேரி நமக்கு பாராட்டுக்களை அள்ளித் தந்தது.

சில ஆண்டுகட்கு முன்னர் நாம் “தமிழ் வாரம்” என்ற பெயரில் ஏழு நாட்கள் தொடர்ந்து நடத்திய தமிழ்க் கலாச்சார கண்காட்சி, சமையல் போட்டிகள், ஜெமினி கணேசன் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆவணப்பட வெளியீடு போன்ற நிகழ்வுகள் இன்னும் பஹ்ரைன் வாழ் தமிழர்களின் மனதில் பசுமையாய் நிலைத்திருக்கின்றன.

பஹ்ரைன் அரசாங்க சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், சட்ட திட்ட அணுகுமுறைகள் போன்றவைகளுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு தேவைபட்டபோதெல்லாம் அதற்கான ஆக்கப்பணிகள் செய்து ஆங்கிலம் அறியாத தமிழ் மக்களுக்கு போய்ச் சேரும் வகையில் எண்ணற்ற உதவிகள் புரிந்துள்ளோம்.

பஹ்ரைன் அரசாங்கத்தின் தேசிய தினத்தின் போதும், மற்ற கலாச்சார நிகழ்வுகளின் போதும், நமது சங்கம் முழுமூச்சுடன் பங்கு பெற்று அரசு அதிகாரிகளின் அங்கீகாரத்தையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளது பஹ்ரைன் அரசாங்கம் நடத்திய மாபெரும் சாலை அணிவகுப்பில் அலங்கரிக்கப்பட்ட திறந்த டிரெய்லர் வண்டியில் தமிழ்க் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் செய்த பிரமாண்டமான வடிவமைப்பு இங்கு வாழும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.

தாய்மண்ணில் சுனாமி, வெள்ளப்போக்கு போன்ற பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் விளம்பரமற்ற முறையில் இங்கிருந்து நாம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறோம். அவர்களின் மறுவாழ்வு புணரமைப்புக்கு பொருளாதார ரீதியில் உதவிகள் புரிந்திருக்கிறோம்.

இரத்ததான முகாம், முதியோர் இல்லத்திற்கு உதவிக்கரம், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேசக்கரம், இன்பச் சுற்றுலா, கருத்தரங்கம், கவியரங்கம். பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றோம்.

தமிழ்ச்கூறும் நல்லுலகிற்கு நம்மால் ஆன அனைத்து பணிகளையும் தொடர உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் நல்குமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

பாரதி தமிழ் சங்க செயற்குழு சார்பாக
அப்துல் கையூம்
தலைவர், பாரதி தமிழ் சங்கம்

15..01.2016

1 comment:

Unknown said...

உங்களை தொடர்புகொள்ள முகவரி வேண்டுகிறேன் .